சூரியனுக்கும் தாகமெடுக்கும் நண்பகல் கோடை
கானல் நீரும் கரைந்துப்போகும் கடுமையான சூடு...
எங்கு நோக்கினும்.,
வெப்பக்காற்றின் வேதனையான வருடல்...
எச்சில்- விலை என்ன என்றுக்கேட்க தோன்றும் நாவறட்சி
புழுதிப்படிந்த பெருந்திறலில்
திசைமாறிய தசை உருவம்
உயிரற்ற காற்றின் உஷ்ணம் தாங்காமல் மேலெழும்பி
மயங்கிவிழும் மஞ்சள் நிற மணல் நிறைந்த பாலை தேசத்தின் நடுவே
கண்களுக்குள் விரல் புதைத்து வாழ்வின் வழி செல்ல
மெல்ல மெல்ல தள்ளாடி வந்தது....
அயர்ந்த அவ்வேளையிலும்
வறண்ட வாய் தேசம் புக துளி தண்ணீரை தேடி
சுடுமணலில் சுருங்கி நின்றது
சுழற்றி அடிக்கும் சூறாவளின் சுவாலைகளில்
சுழலாமல் கருக்கும் அனலின் சுவாசங்களில் சிக்குண்டும்
ஒற்றை உயிர் இனியும் உலவ வேண்டும் என்ற எண்ணத்தில்
கண்ணின் வழி
காட்சிகளை
பற்றி பிடிக்க...
சற்றே தூரத்தில் அசாதரணமாய் ஏதோ தென்பட
அங்கேணும் தண்ணீர்
கிடைக்குமா
என சந்தேகத்தில் கண்கள் கண்ணீர் கொண்டது
கிடைக்கும் இந்த தேசத்தில்...
கால்கள் நம்பிக்கை கொண்டது.
கால் வாசி உயிரும்
முக்கால் வாசி உணர்வும் அற்ற நிலையில்
அவ்விடம் நோக்கி தேகம் மையல் கொண்டன
தண்ணீரின் தடயங்கள் இருப்பதை பார்த்து
தாகத்தின் சுவடுகள் சாந்தம் கொண்டன...
ஆயிரம் வால்ட் மின்சாரத்தை
அதிவேகமாக மின்மினி பூச்சிகளில் புகுத்திய
புத்துணர்ச்சி...
காரணம் கண்ட காட்சி
அகல விழி திறந்து
ஆராவாரம் அற்ற அப்பகுதியில்
அறிவார்ந்து
அதை நோக்கிய போது
கரைப்படிந்த பாத்திரம் - எனினும்
அதனுள்ளே கால்வாசி தண்ணீர்..!
அதிர்ச்சி விழிகளில் ஆசை தீ பரவ
எடுத்து பருகும் எண்ணத்தில்
பாத்திரம் நோக்கி தம் கரம் நீட்ட
பாத்திரம் தொடும் முன் ஒரு பத்திரம்
கண் பட்டது
ஆம்! அங்கே ஒரு பலகை
பலவகை வார்த்தைகளுடன்.,
நேற்றி சுருக்கி எழுத்தை ஆராய்ந்தான்...
அறிவிப்பு
====================================================================
இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணிரை அருகே இருக்கும் குழாயில் ஊற்றி
பம்பில் அடித்தால் தண்ணீர் வரும்-
குடித்து முடித்தப்பின் அந்த பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி இங்கு வைத்து விடவும.
=====================================================================
" வார்த்தைகள் படித்ததும் வரையறையற்ற குழப்பம்.."
அருகே...
ஆயிரம் வருடங்களுக்கும் மேலான
அரதபுரதான...
ஆழ்துளை ஆயுத குழாய் - தண்ணீர்
வருவதற்கான அடையாளங்களை முற்றிலும் தொலைத்த
அறிகுறீகளுடன் அயர்ந்து நின்றது.
வார்த்தை பிழையென்றால்
தண்ணீரும் வீண்
தம் உயிரும் வீண்
செய்முறை பயிற்சிப்படி செயல்பட மனம் மறுத்தது
சுயநல சுருக்கு
சிந்தையை இறுக்கி கட்டியது
சூன்யமாய் விளக்கி...
கொண்ட தாகத்தை பெரிதாய் காட்டியது
முடிவில் முரண்பாட்டு அறிவு சொன்னதை
முழுதாய் ஏற்றது
பருகலாம் என்று பத்திரமாய் எடுத்த
பாத்திரம் வாய்வரை செல்ல
உதட்டின் ஓரத்தில் ஒருதுளி விழ
சுளிரென்று சுட்டது சுய சிந்தனை
எழுதிய வார்த்தைகள் உண்மையென்றால்...
அறிவற்று அனேக மக்களுக்கு
அநீதி விளைவித்தவன் போலாவேனே...?
இன்றைய என் சுய நலத்திற்காக
இந் நீர்அருந்தினால்
இவ்விடம் நோக்கும்
நாளைய மனிதர்களின் நல்வாழ்வை பூஜ்யமாக்கல்
சரியா...?
பராவயில்லை.,
இருக்கும் தண்ணிரை குழாயில் ஊற்றுவோம்
எழுதியது பொய்யென்றால்
பயனற்று போவது நம்வாழ்வு மட்டும்
உண்மையென்றால்
பயனடையபோவது
இனிவரும் எல்லோரும் தான்
முடிவாய் குழாயில் நீர் ஊற்ற
முடிவு செய்தான்.
ஊற்றினான்
ஒன்றும் ஆகவில்லை -எனினும்
உயிர் இன்னும் போகவில்லை... எண்ணிணான்
சில நிசப்தங்களுடன் கணங்கள் தொடர்ந்தன
ஆச்சரியம்!
மெல்ல தலைக்காட்டிய தண்ணீர்
புவியில் கால்ப்பதித்த மகிழ்ச்சியில்
குழாயின் வாய் பிளந்து
தம் வருகையே
அதிகரித்தது...
வாயில் நுழைந்த நீர் அவனது
வாழ்வையை ஈரமாக்கியது
புத்துணர்ச்சி...
அப்பாலையில் புதிதாய் பூத்தது
மனமகிச்சி பொங்க.. அள்ளி பருகிய
நீர்
தாகத்தை தகர்த்தது...
பெருகிய வெள்ளத்தில் அவனது
சுயநல அழுக்கு அடித்துப்போனது...
நிரம்ப குடித்த மகிழ்ச்சியில்
கடவுளுக்கு நன்றி உதிர்த்துவிட்டு
பவ்யமாய் பழைய பாத்திரத்தில்
புதுநீர் புகுத்தி
நலமுடன் வைத்து
வெற்றி புன்னகையோடு
வடக்கோ தெற்கோ.. ஏதும் அறியாமல்
வாழ்வியல் திசை நோக்கி புறப்பட்டான்...
அந்த பொதுநல விரும்பி..!
இந்த நீதிக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்., எனினும் கவிதை வடிவில் எழுதலாம் என முயற்சித்தேன்...
நாம் எல்லோர் வாழ்க்கையிலும் இக்கட்டான சில தருணங்கள் வரத்தான் செய்கிறது. சுய நல மனிதர்கள் கிடைக்கும் வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்... ஆனால் அத்தருண சுய நலங்கள் பலரது வாழ்வியலை அழித்து விடுகிறது., ஆக நமக்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் பொது நல விரும்பியாக இருக்கவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதே இக்கதை சொல்லும் நீதி!!!